55 கருத்திட்ட அலகுகளை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானம்


 அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 கருத்திட்ட அலகுகளை (Project Office) முடிவுறுத்துவதற்கான பரிந்துரையை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமை அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.


பல்வேறு நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகள் கணிசமான செலவுகளை எதிர்கொள்வதோடு, அந்த அலுவலகங்கள் மற்றும் அலகுகளுக்கு கணிசமான எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.


இதன் கருத்திற்கொண்டு, 2022 இடைக்கால பாதீட்டை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவற்றின் செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார்.


இதன்படி, கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ அலகுகளால் எதிர்பார்த்த நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளதா, அவற்றைத் தொடர வேண்டுமா என்பது குறித்து பரிசீலனை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி.கமால் பத்மசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


தற்போது இயங்கி வரும் 55 கருத்திட்ட முகாமைத்துவ அலகுகள் மூடப்பட வேண்டும் என்றும், மேலும் 32 திட்ட முகாமைத்துவ அலகுகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும், 46 திட்ட முகாமைத்துவ அலகுகள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த குழு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.


இதன்படி, குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த 55 அலுவலகங்களையும் மூடுவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.


இதன்படி குறித்த குழுவின் அறிக்கை குறித்து எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: