Breaking news. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் எழுத்து மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளை 077 56 87 387 WhatsApp இலக்கம், 0112 39 26 41 தொலைநகல் இலக்கம் அல்லது consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்சாரத்தை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பியுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள 31,709 மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்காது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் எழுத்துமூலமான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மத்திய வங்கி என்பன தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை அறிவித்ததையடுத்து இந்த நெருக்கடி ஏற்பட்டது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளின் கருத்தை மதிக்காமல் கையொப்பம் பெற்றுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
No comments: