அரசிலிருந்து வெளியேறுகின்றதா ? இ.தொ.கா

 (க.கிஷாந்தன்)அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் ” - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (02.04.2022) அறிவித்தார்.  

 அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியால் தலவாக்கலையில் நாளை முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு தமது கட்சி எதிர்க்கவில்லை எனவும், அதனை ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (02.04.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். அந்தவகையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் மிரிஹான வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தவறான செயலாகும். என்னதான் வதந்திகள் பரவினாலும், முறையான விசாரணையின்றி மக்களை கைது செய்து, துன்புறுத்துவது நியாயம் அல்ல.  

சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் நாளைய தினம் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை . ஏனெனில் சமையல் எரிவாயு, எரிபொருள் இன்றி மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். இதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர். அதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாம் ஆதரவு.  

மரிஹான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் கண்டிக்கின்றோம். அது நியாயமற்ற செயலாகும். மக்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

 அரசுக்கு எமது எதிர்ப்பை காட்டிவிட்டோம். சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்தோம். ஆனால் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் இ.தொ.கா. இப்படி செயற்பட்டது என சிலர் வதந்தி பரப்பினர்.  

 இராணுவத்துக்காக 10 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடமும் உள்ளடங்குகின்றது. இதனை நாம் எதிர்த்தோம். 

 மக்களுக்கு வேலை நடக்கனும், நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு சார்பான முடிவையே நாம் எடுப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனால் அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும்.” - என்றார்.


 

No comments: