மலையகத்தில் வரலாறு காணாத வறட்சி

(க.கிஷாந்தன்)மலையகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன.

குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக வறட்சியான காலநிலை நிலவுவதனால் இந்நீர்த்தேகத்தில் நீர் மட்டம் மேலும் குறைவடையலாம் எனவும் எனவே நீரினை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவெகுவாக குறைவடைந்துள்ளதன் காரணமாக தற்போது மின் துண்டிப்பு இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் ஐந்து ஆறு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் எரிபொருள் மற்றும் நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக 10 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதே நேரம் மலையகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினையடுத்து நீர் ஓடைகள் நீரூற்றுக்கள், ஆகியனவும் வற்றிப்போய் உள்ளன. இதனால் தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிவரும் வறட்சியான காலநிலையினையடுத்து மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 சதவீதம் நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும், கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 சதவீதமும், விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 சதவீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 சதவீதமும்? சமனலவென 14.6 சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் தற்போது அதிகமான நீர்த்தேக்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் நீரில் மூழ்கி கிடந்த குடியிருப்புக்கள் கட்டடங்கள் வீதிகள், தொழிற்சாலைகள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளதனால் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதேசவாசிகள் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: