News வெற்று கோஷம் எழுப்புபவர்களுக்கு பாரத் அருள்சாமி சாட்டையடி

News

NEWS

(க.கிஷாந்தன்)

' மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே எமது பயணம் அமைந்துள்ளது. அதேபோல வெற்று கோஷம் எழுப்புபவர்களுக்கு விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க முடியும். அவர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் காங்கிரஸின் பயணம் மக்களுக்கானது. ' - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

தலவாக்கலையில் 11.01.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

' கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் பிரஜாசக்தி செயல் திட்டம் ஊடாக 2021 ஆம் ஆண்டில் பல சேவைகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். மேலும் பல திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம். சுயதொழில் ஊக்குவிப்பு, பிரஜா வித்யா திட்டத்தின் கீழான கல்வித் திட்டம், பிரஜா விருட்சம் ஊடான சுற்றாடல் பாதுகாப்பு என பல விடயங்கள் இதில் உள்ளடங்குகின்றன. அதேபோல மலையகப் பகுதிகளில் தடுப்பூசி திட்டம் வேகமாக இடம்பெறுவதற்கும் நாம் முழு ஒத்துழைப்பை வழங்கினோம். இதற்கு எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானும் முழுமையான ஒத்துழைப்பையும், வழிகாட்டல்களையும் எமக்கு வழங்கினார். தற்போதும் வழங்கி வருகின்றார்.

அவரின் வழிகாட்டலுடன் 2022 ஆம் ஆண்டிலும் பிரஜா சக்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஊடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதான 4 விடயங்களை இலக்காக வைத்து திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி, தற்சார்பு பொருளாதாரம், கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் விளையாட்டு என நான்கு அம்சங்களின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெறும். 44 பிரஜா சக்தி நிலையங்கள் உள்ளன. கடந்த வருடம் சுமார் 10 ஆயிரம் பேர்வரை பயன்பெற்றனர். இம்முறை அதனை இரட்டிப்பாக்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

எமது மக்களுக்கு காணி உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும். முதற்கட்டமாக 500 பேருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையை 50 ஆயிரம்வரை அதிகரிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

அதேவேளை, அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அதனை தனியார் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். கோதுமை மா நிவாரணத்தை பெற்றுக்கொடுத்ததையும் சிலர் விமர்சிக்கின்றனர். அவர்களால் விமர்சிக்க மட்டும்தான் முடியும். கோதுமை மா மட்டுமல்ல எமது மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் நாம் பெற்றுக்கொடுப்போம். மக்களின் தேவை அறிந்துதான் எமது செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கூச்சலிடுவதாலோ, விமர்சனம் முன்வைப்பதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதுதான் எமது இலக்கும். கூடுதலாக வழங்கப்படுமே தவிர அதைவிட குறைவாக கிடைக்காது. ' -என்றார்.

No comments: