கொட்டகலையில் நிறுத்தப்பட்ட பொடி மெனிக்கெ


(க.கிஷாந்தன்)

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கெ புகையிரதம் புகையிரத சமிஞ்ஞை பிரச்சினை காரணமாக கொட்டகலை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் குறித்த ரயிலில் வந்த பயணிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதுடன், அட்டன் - நுவரெலியா பிரதான வீதியை கொட்டகலை நகரில் மறித்து ஆர்ப்பாட்டத்தலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்த சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசரமாக மறுபடியும் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

இதன்படி கொட்டகலை ரயில் நிலையம் மூடப்பட்டதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடிமெனிகே ரயில் இன்று (14) மதியம் 12.45 அளவில் கொட்டகலையில் இடைநடவே நிறுத்தப்பட்டது.

இதனால் அட்டன் மற்றும் திம்புளை பத்தனை பொலிஸார் இணைந்து அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி கொட்டகலை ரயில் நிலையம் வரை குறித்த ரயிலை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேற்படி நடவடிக்கையால் நீண்ட விடுமுறை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோரும், தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் தமிழ் மக்கள் என ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதனால் கடும் சிரமங்களுக்கும், பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல் கொட்டகலை நகரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் நகர வீதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

அட்டன் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலைமையை விளக்கி அட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் இருந்து ஏழு பஸ்களில் ஊடாக நுவரெலியா மற்றும் பதுளை நகரங்களுக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments