தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது (மனோ முழக்கம்)

 


ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.

அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற தேர்தல்முறை தெரிவுக்குழுவின் முதற்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை.அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.

ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும்கூட இடமளிக்காது.

அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.

பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.

இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே ஒன்பது (9) தமிழ் எம்பீக்களும், இருபத்திஐந்து (25) தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும், ஏழு (7) முஸ்லிம் எம்பீக்களும், பதினெட்டு (18) முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவாகின்றார்கள்.

இந்நிலையில் தேர்தல் முறையை மாற்ற கிளம்பும் அரசுக்கு, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், 20ம் திருத்தத்துக்காக அரசு பக்கம் தாவிய சிறுபான்மை எம்பீக்களும் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.

இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு, மாற்று யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

தேர்தல் சீர்திருத்தை கோருவது அரசாங்கம்தான். ஆகவே இது தொடர்பான நியாயமான யோசனைகளை முன்வைக்க வேண்டியது அரசாங்கமே ஆகும். ஆகவே இது தொடர்பான பந்தை நாம் அரசாங்க பக்கத்துக்கு அடித்து அனுப்ப வேண்டும்.

மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை ஆரம்பத்திலேயே முன் வைப்பது முறையாகாது. இதுபற்றிய தெளிவும், அனுபவமும் அற்ற ஒருசிலரின் யோசனை முன்மொழிவுகள், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமையை முன்வைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, ஜனத்தொகைக்கு ஏற்ப, இன்றைய தேர்தல் மாவட்டங்களை, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.

இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம். ஆகவே இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் என்ற விடயம் தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல் முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும்.

No comments: