மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் !தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆகியோருக்காக நிவாரணப் பொதியொன்று வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைய, மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் முறைமையொன்றை செயற்படுத்துவது தொடர்பில் வர்த்தக அமைச்சினால் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆகியோருக்கு அத்தியாவசியமான 20 நுகர்வுப் பொருட்கள் அடங்கிய 5 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியொன்றை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நன்மை கருதி குறித்த நிவாரணப் பொதியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள், உரிய மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் ஆகியோரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக, குறித்த நிவாரணப் பொதியை உரிய மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிவாரணப் பொதியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளுக்காக மாத்திரம், சதோச விற்பனை நிலைய வலையமைப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலைய வலையமைப்பு ஆகியன திறந்திருக்கும் எனவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments