இன்றைய ஐபிஎல் போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் VS ஐதராபாத் சன் ரைசர்ஸ்


ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இப்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐதராபாத் அணி இதுவரை ஆடிய போட்டிகளில் நான்கு தோல்விகளையும் ஒரு வெற்றியையும் பெற்றிருக்கிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவர் வரை போராடி தோல்வியே மிஞ்சியது. 

வில்லியம்சனின் வருகை அந்த அணிக்கு தெம்பாக இருந்தாலும் கேப்டன் வார்னர், பேர்ஸ்டோ உள்பட பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாதது பலவீனமாக இருக்கிறது.

பந்துவீச்சில் ரஷித்கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோரையே நம்பி இருக்கிறது. அடுத்த வெற்றிக்காக இன்றைய போட்டியில் அந்த அணி இன்னும் தீவிரத்துடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தான் எதிர்கொண்ட முதல் போட்டியில், டெல்லி அணியிடம் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிறகு அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்று மிரட்டி வருகிறது. 

சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், டுபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மொயின் அலி ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹர், சாம் கர்ரன், இம்ரான் தாஹிர் அமர்க்களப்படுத்துகின்றனர்.

இதற்கிடையே ஜடேஜா ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான கடந்த போட்டியில், 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசி, வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்தினார். இந்த ஜட்டு. பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய அவர், இன்றைய போட்டியிலும் அந்த மேஜிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பாக்கிறார்கள், ரசிகர்கள்.

இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணி ஆடி வந்தது. இன்றைய போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது.

No comments: