மிதுன ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும் உடைய மிதுனராசி அன்பர்களே... நீங்கள் யார் மனதையும் புண்படுத்த மாட்டீர்கள். எல்லோருக்கும் உதவுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்தப் பிலவத் தமிழ் புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

பொது - குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். இனி வீட்டில் அமைதி தங்கும். மனைவியுடன் இருந்த சண்டை - சச்சரவுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி, உறவு பலப்படும். பிள்ளைகள் இனி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும்.

ஆனி மாதத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். அழகு கூடும். முகம் மலர்ச்சி அடையும். உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும். கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அக்கம் பக்கம் வீட்டாருடன் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். உங்களின் கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் ஆனி, ஆவணி மாதங்களில் சிறப்பாக முடியும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

பொருளாதாரம் : உங்களின் லாப ராசியில் இந்த வருடம் பிறப்பதால் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. இந்தப் பிலவ வருடத்தில் துயரங்கள் யாவும் நீங்கும். புரட்டாசி மாதம் முதல் புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இதுவரை, தொழில் தொடங்கலாம் என முயன்றபோது எல்லாத் தடைகளும், தாழ்வு மனப்பான்மையும் தானே வந்தது... இனி நீங்கள் எதையும் தகுந்த முன்யோசனையுடன் செய்வீர்கள்.

குருபகவான் தரும் பலன்கள்

14.4.2021 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் ஆண்டு முடியும்வரை குரு 9 - ம் வீட்டில் அமர்வதால் எதிர்பாராத பணவரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை என அனைத்து யோகமும் கூடிவரும். அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தின் வருமானமும் உயரும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 8 - ல் மறைந்திருக்கும் நேரத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.2022 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால் பயம், கோபம், தூக்கமின்மை, வீண்செலவு, திடீர் பயணம் உண்டாகும். கேது 6-ல் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீடான 11 - ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் தகுதி உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து விஷயங்களிலிருந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5 - ல் நிற்பதால் வீண் குழப்பம், பிள்ளைகளால் மன வருத்தம், குடும்பத்தில் அதிருப்தி, நெருங்கிய உறவினர்களுக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும்.

சனிபகவான் அருளும் பலன்கள்

இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச்சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். பணப்பற்றாக்குறை, கணவன் - மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரம் 

கடுமையான போட்டி, மறைமுகத் தொந்தரவு வேலையாட்களின் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கை, முக்கிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போவது ஆகியவை நீங்கி இந்த வருடத்தில் எல்லாம் நலமாகும். ஆனி மாதம் முக்கியமான பெரிய தொகைகளை வசூலிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டடத் தொழிலில் இருப்பவர்கள் இழந்ததை மீட்பீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி செய்வோர், கலைத்துறையினர், மின்னணுத் துறையினர் அதிக லாபம் ஈட்டுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த உதவி கிடைக்கும்.

உத்தியோகம்  

வேலைச்சுமையும், விரக்தியும் நீங்கும். கடுமையாக உழைத்தும், நல்ல பெயர் வாங்க முடியாமல் அதிருப்தியாக இருந்தீர்களே! இந்த வருடத்தில் உத்தியோகத்திலிருந்த பிரச்னைகள் தீரும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது வேலை கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்கும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கிசுகிசுக்களின் தொல்லை நீங்கும்.

Post a Comment

0 Comments