தன்னை தாமே பாதுகாத்துக் கொள்வதன் ஊடாகவே கொரோனாவை வெற்றிக்கொள்ள முடியும் - அனுஷா சந்திரசேகரன்


அபிவிருத்தியடைந்த நாடுகளையே  நடுங்கச் செய்துள்ள கொவிட் -19 எமது நாட்டிலும் பரவ வேகமெடுத்துள்ளமை  சகலருக்கும்  அதிர்ச்சியையும் தடுமாற்றத்தையும்  ஏற்படுத்தி வருகிறது. 

ஒவ்வொரு தனிமனிதரும் தன்னை தாமே பாதுகாத்துக் கொள்வதன் ஊடாகவே இதனை வெற்றிக்கொள்ள  முடியுமென சட்டதரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான திருமதி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவங்களில் வீரியம் பெற்று  மக்களுக்கு பேரழிவினை ஏற்படுத்தி வருகின்றது.

அணு சக்தி பலம் கொண்ட அமெரிக்கா பிரிட்டன் இந்தியா போன்ற நாடுகளே இன்று உயிரிழப்புக்களால் நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 

கொவிட் -19   தடுப்பூசிகளை தயாரித்து எமக்கு வழங்கிய இந்தியாவிலேயே உயிரிழப்பு விகிதம் சமாளிக்க முடியாதுள்ளது இதனையெல்லாம் வெறும் செய்தியாகவோ அல்லது  அதிர்ச்சியான  சம்பவங்களாக மாத்திரமோ  பார்க்காமல்  இதிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்  மனித நேயங்களை  வளர்த்துக் கொள்ள வேண்டும் 

மலையக சமூகமாக தொடர் குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் நாம் பாதுகாப்பு தரப்பினரின் தண்டனைகளுக்குப் பயந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுகாதார தரப்பினரின்  அறிவுருத்தல்களை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றினால் மட்டுமே  எமது உயிருக்கு நாமே உத்தரவாதம் கொடுத்துக் கொள்ள முடியும். 

எமது உயிர் பெறுமதியானது  என்பதனையும் நாம் வாழ வேண்டியதன் அவசியம் நாம் ஒட்டு மொத்த குடும்ப நலமும் எதிர்காலமும் சார்ந்தது என்பதனை உண்மையாக உணர்ந்து கொண்டாலே  எம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ளும் அவசியத்தையும் புரிந்து கொள்ளவோம்.

அரசாங்கம் வழங்கும் நிவாரனமோ  அல்லது அவ்வப் போது கிடைக்கும் சிறு சிறு வசதிகளோ  எமக்கு நிரந்தர தீர்வை  தரப்போவதில்லை. 

ஆகவே உலகமே உயிர் ஆபத்தினை  எதிர்நோக்கியுள்ள  உண்மையைப் புரிந்து  கொண்டு  அதிலிருந்து எம்மை காப்பாற்றிக் கொள்ளும் எல்லா முயற்சிகளையும் நாமாகவே மேற்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.

No comments: