பொதுமக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை


சுகாதார தரப்பினரால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றாத பட்சத்தில் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக, இராணுவத்தளபதி சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், புத்தாண்டு கொள்வனவு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு துரதிஷ்டவசமான சூழ்நிலை எனவும், இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுவருட கொண்டாட்டங்களை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: