"பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்" - கமல்ஹாசன்


“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், நேற்று விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மாரடைப்பு வந்தது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு, அரசு சார்பில் மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் அளிக்கப்படுள்ளன.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம். இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையை செய்யட்டும். தயவு செய்து தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் அனுமானங்களை நம்பவேண்டாம்” என்று கூறியுள்ள நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்

“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்” என்று கூறியுள்ளார்.

No comments: