நடிகை நயன்தாராவின் முதல் படம் - கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்ட சுவாரஸ்ய விடயங்கள்..!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற புகழப்படுபவர். இவர் மலையாளத்தில் 2003 ம் ஆண்டு ரிலீசான மனசினக்கரே என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயராமிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் உண்மையில் நயன்தாராவின் முதல் படம் மலையாளத்தில் இல்லையாம். தமிழில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்தில் நடிக்க தான் நயன்தாராவின் முதல் தேர்வானாராம். இந்த படத்தை துரை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார்.

முதல் தேர்வு நயன்தாரா 

தொட்டி ஜெயா படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க, துரை முதலில் தேர்வு செய்தது நயன்தாராவை தானாம். ஆனால் தனது முதல் தமிழ் படமான ஐயா படத்தின் வேலைகளில் நயன்தாரா பிஸியாக இருந்ததாலும், தொட்டி ஜெயா படம் தொடர்ந்து தள்ளி போனதாலும் அந்த படத்தில் நயன்தாரா நடிக்க முடியாமல் போனதாம்.

தாணு வெளியிட்ட ரகசியம் 

கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. நயன்தாராவை தன்னால் தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போனது தொடர்பாக கலைப்புலி தாணு வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாணுவை கவர்ந்த நயன்தாரா 

நயன்தாரா பற்றி கலைப்புலி தாணு கூறுகையில், தொட்டி ஜெயா படத்தில் நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தோம். அப்போது பத்திரிக்கை ஒன்றில் டயானா மரியம் குரியன் என்ற நிஜப் பெயரைக் கொண்ட நயன்தாராவின் ஃபோட்டோவை பார்த்தேன். அவரை படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தேன்.

பிஸியான நயன்தாரா 

அவரை நான் அனுகும் போது மலையாள படத்திலும், தமிழில் ஐயா படத்திலும் நடிக்க புக் ஆகி இருந்தார். அந்த சமயத்தில் தான் மலையாளத்தில் ஃபோர் தி பிபிள் படத்தில் நடித்த கோபிகாவை நடிக்க வைக்கலாம் என டைரக்டர் துரையும், கேமிராமேன் ஆர்.டி.ராஜசேகரும் கூறினர் என்றார்.

நம்பர் ஒன் இடத்தில் நயன்தாரா 

கலைப்புலி எஸ்.தாணுவால் தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போன நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது நெற்றிக்கண், ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.


Post a Comment

0 Comments