நடிகர் விவேக்கின் உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


சின்னக் கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல், 24 காவலர்கள் 3 முறை துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டு, மரியாதை செலுத்திய பின் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

நேற்று ( 16-4-2021) காலை 11 மணியளவில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தன. 

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில்,நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, இதய அடைப்பு நீக்கப்பட்டது என்று மருத்துவர் விளக்கம் அளித்தார். 

மேலும் அவரது உடல் நிலை அபாயக்கட்டத்தில் இருக்கிறது என்றும் அடுத்த 24 மணி நேரம் கழித்தே அவரது உடல் நிலைபற்றி கூறமுடியும் என்றும் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் பிரிவால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர். 

பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது . 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments: