"இப்போது இருக்கும் தோனி, நாம் 5 ஆண்டுக்கு முன்பு பார்த்தவர்போல இல்லை! “ - கவுதம் காம்பீர்


சிஎஸ்கே அணியை வழி நடத்தும் விதமாக தோனி பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கி விளையாட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. முன்னதாக சிஎஸ்கே தன்னுடைய முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். அந்தப் போட்டியில் அவர் 7 ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கவுதம் காம்பீர் "சிஎஸ்கே அணியை வழி நடத்தும் விதமாக தோனி பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கி விளையாட வேண்டும். ஒரு அணி தலைவராக அவர் வழி நடத்த வேண்டும். 7 ஆம் வீரராக களமிறங்கி ஒருபோதும் அணியை வழி நடத்த முடியாது. அதேபோல அணியின் பவுலிங் வரிசையிலும் பிரச்னை இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "இப்போது இருக்கும் தோனி நாம் 5 ஆண்டுக்கு முன்பு பார்த்தவர்போல இல்லை. அப்போதெல்லாம் தோனி எதுவாக இருந்தாலும் முதலில் தாமே முன் வந்து செய்ய தொடங்குவார். என்னை பொறுத்தவரை தோனி 4 அல்லது 5 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். அதற்கு கீழே களமிறங்க கூடாது" என்றார் கவுதம் காம்பீர்.

No comments: