ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது


நேற்று நடைபெற்ற ஐபிஎல் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இவரையடுத்து வந்த தீபக் ஹூடா ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். கேஎல் ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்நிலையில், தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸும் அவரையடுத்து மனன் வோரா 12 ரன்னில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். இவர்களையடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொருப்புடன் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்து அடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 25 ரன்னில் வெளியேற அவரையடுத்து வந்த ஷிவம் டூபே 23 ரன்னிலும் வெளியேறினார்.

பின்னர் வந்த ரியான் பராக் தன் பங்கிற்கு 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனிடையே சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

No comments: