தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 3,500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்


இம்முறை தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக 3,500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு அபிவிருத்தி வலயங்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்களை கொழும்பில் ஒன்றிணைப்பதை தவிர்த்து, அவரவர் சேவை புரியும்  தொழிற்சாலைகளில் இருந்து சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அவரவர் தொழில் புரியும் இடங்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் கமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இதனூடாக, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல், அநுராதபுரம், பெலிஅத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments