பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் ! நுவரெலியாவில் பஸ் விபத்து - 20 பேருக்கு பலத்த காயம்(க.கிஷாந்தன்)

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இராகலை - கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளது.

ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இராகலை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 29.04.2021 அன்று பிற்பகல் 12 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 20 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரும், ஹைய்பொரஸ்ட் வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் இராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: