10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போடிட்யில், 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சிவம் துபே, ரியான் பராக் ஜோடி கைகொடுத்தது. சிவம் துபே 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதிகட்டத்தில், ராகுல் திவாட்டியா அதிரடியாக 40 ரன்கள் சேர்த்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக, கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். 

முதல் ஓவரில் இருந்தே, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை இருவரும் சிதறடித்தனர். கடைசி வரை நங்கூரமாய் நிலைத்து நின்று களமாடிய கோலி – படிக்கல் ஜோடி, விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தது. 

17வது ஓவரின் 3வது பந்தில் வெற்றி இலக்கான 178-ஐ கடந்த பெங்களூரு அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

விராத் கோலி, 47 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார். இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். 

இந்த ஐபிஎல் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை படிக்கல், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த போட்டியில் 181 ரன்கள் குவித்த கோலி – படிக்கல் ஜோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில், அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்தது. 

இதேப் போல, விக்கெட் இழப்பின்றி அதிக ரன்களை சேஸ் செய்த அணிகளின் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3வது இடம் பிடித்தது.

2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், விக்கெட் இழப்பின்றி 184 ரன்கள் குவித்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் காம்பிர் – லியான் ஜோடி முதலிடத்திலும்,

கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக, சென்னை அணியின் வாட்சன், டுபிளசிஸ் ஜோடி 179 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நேற்றைய போட்டியில் பெற்ற அசத்தலான வெற்றியின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

No comments: