நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட oxford astrazeneca covishield தடுப்பூசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ராணுவ வைத்தியசாலையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபகஷவின் அறிவுறுத்தலின் பிரகாரம்  இன்று முதல்  பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிககையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல்மாகாணத்தில் அதிக அபாய வலயங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு  இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகள்  எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் நாட்டிற்கு  கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே  தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட பணியாளர்களுக்கு நாளை மறுதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக  ஆரம்ப சுகாதார மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு  ராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 ஆயிரத்து 100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனவரி  மாதம் 29ம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் நாட்டில்  ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments