இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏமாற்று அரசியலை மலையக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் - ப.கல்யாணகுமார்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக்கொண்டு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு
அழைப்பு விடுப்பது கேலிக்கூத்தானது என தொழிலாளர் தேசிய சங்கத்தின்
பிரதிப் பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமாகிய
ப.கல்யாணகுமார் தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் 05 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடையாள வேலை
நிறுத்தப் போராட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் அவர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாபதி தேர்தலில் தற்போதை ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஷவிற்கு
ஆதரவளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கெட்டகலையில் ஏற்பாடு செய்யப்பட்ட
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ தான்
வெற்றிபெற்றவுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை
பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார்.

அந்த வாக்குறுதியை நம்பிய மலையக மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கினர்.
அதே போல இறுதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்  தேர்தல் மேடைகள் அதிகாரத்தை
தாருங்கள் தோட்ட கம்பனிகளை ஓட ஓட விரட்டுகிறேன் என்று ஆயிரம் ரூபாய்
சம்பளம் பெற்றுதருவதாக கூறி வாக்குகளை பெற்று இராஜங்க அமைச்சரானார்.

அதன் பின்னர் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் அமரர் ஆறுமுகன்
தொண்டமானின் இறுதி கிரியை நிகழ்விலும்   2021 ஆம் ஆண்டுகான பாதீட்டு
வாசிப்பின் போதும் பிரமர் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
ஜனவரி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

இவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பளம்  வழங்குவதாக ஆயிரம் பொய்
வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கமும் இலங்கை தொழிலாளர் காங்ரஸும் இன்று
தொழிலாளர்களை அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பது
கேலிக்கூத்தானது.

அத்தோடு கூட்டொப்பந்தத்தில் உள்ள கூட்டுத்தொழிற்சங்கங்கள் இணைந்து
கூட்டாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது  ஏன்?தன்னிச்சையாக அடையாள போராட்டத்திக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அழைப்பு விடுத்துள்ளதானது தனது தனிப்பட்ட பலத்தை காட்ட முற்படும்
செயற்பாடா என சந்தேகம் எழுகிறது.

எனவே மலையக பெருந்தோட்ட மக்களை வாழையடி வாழையாக தொடர்ந்து
பகடைக்காய்களாக வைத்து ஏமாற்றி வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை
இனியாவது மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: