கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் 4 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பதிவானமையை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - 3 பகுதியை சேர்ந்த 75 வயதான ஆணொருவர், கடந்த 2 ஆம் திகதி தமது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக அவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாவல பகுதியை சேர்ந்த 89 வயதான ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நிலையில் கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோயால் சிறுநீரகம் செயலிழந்தமை, குருதி நஞ்சாதல் மற்றும் குருதி விசமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நீண்ட காலமாக காணப்பட்ட இதய நோய் மற்றும் தீவிர நீரிழிவு நோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 72 வயதான ஆணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று முன்தினம்  உயிரிழந்துள்ளார்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைத்து தொற்றுறுதியான நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் நியூமோனியாவினால் இதயம் செயலிழந்தமையை அடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்குளி பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர் தொற்றுறுதியான நிலையில் கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியாவுடன் குருதி விசமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பல உடற்தொகுதி செயலிழந்தமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்”  என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: