கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் தலைமறைவான தம்பதியினர்


கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் தலைமறைவான தம்பதியினர் கொஸ்வத்தை, பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட தகவலை தொடர்ந்து கொஸ்வத்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹெந்தல, வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கணவர் ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் நபர் எனவும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபர் அவரது மனைவியுடன் தப்பிச் சென்று கொஸ்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபர் தங்கொடுவை வைத்தியசாலையிலும், மனைவி மாரவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: