சுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு

செ.துஜியந்தன்


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்கள் இனங்காணப்பட்டு அவ்உணவுப்பொருட்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் அழிக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர்.

களுவாஞ்சிக்குடி பிராந்திய  மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் மேலதிக சுகாதாரப் பணிப்பாளர் ஏ.உதயசூரிய தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் மாங்காடு, செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நடமாடும் பேக்கரி உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டவர்கள் நிறுத்தப்பட்டு சுகாதாரப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

இதன்போது மருத்துவச் சான்றிதழ் இன்றியும், சுகாதார விதிமுறைகளை மீறியும் விற்பனை செய்யப்பட்ட பாண், வனிஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி சுகாதாரப்பிராந்தியத்தில் மருத்துவச்சான்றிதழ் இன்றி உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைவரும் மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் எனவும் சுகாதாரப்பரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சுற்றிவளைப்பின்போது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான கே.இளங்கோவன், வி.கணேசன், எஸ்.சிவசுதன், எஸ்.விக்னேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments: