வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு


வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேன்முறையீடு செய்த பட்டதாரிகள் குறித்த மூன்றாம் கட்ட பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பட்டதாரிகளின் அடிப்படை தகைமைகளை பரீட்சித்ததன் பின்னர் அவர்களை பயிற்சியில் இணைத்துக் கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை சமர்ப்பிக்கப்பட்டிருந்த அனைத்து மேன்முறையீடுகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், பட்டதாரி பயிலுநர் நியமனத்துக்காக கடந்த நவம்பர் 13ம் திகதி, டிசம்பர் 11ம் திகதி மற்றும் நேற்றைய தினம் ஆகிய நாட்களில் வெளியிடப்பட்ட கடிதங்களின் மூலம் தமைமை பெற்றுள்ளதாக பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: