கல்முனை நகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான கூட்டம்

ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ் 


கல்முனை நகர் பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி தொடக்கம் இன்று வரை ஆறு நாட்களாக 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  முதல் கட்டமாக நிவாரணங்களை வழங்குவதற்கென சுமார் மூன்றரை கோடி ரூபா  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. என்று பிரதேச செயலாளர் எம். எம். நஸீர் தெரிவித்தார்.

கல்முனை நகரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (03) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பொதுமக்களின் நலனை பாதுகாப்பதற்கு எப்போதும் பின் நிற்பதில்லை. திட்டமிட்டு வேண்டுமென்று பிரதேசங்களை லோக் டவுன் பண்ணுவதில்லை. கல்முனை பிரதேசத்தில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு பிரிவுகள் எமது பிரதேசசெயலக பிரிவிலும் ஏழு பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழும் வருகின்றன. தற்போது இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு  நிவாரணம் வழங்குவது அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள போதிலும்  அரசாங்கம் இவர்களை கைவிட மாட்டாது.

இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமார் மூன்றரை கோடி ரூபா நிதியை நாம் மதிப்பீடு செய்துள்ளோம். இவை தவிர  தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கான இந்த நிவாரணங்களை உரிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் சரியான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதற்கும் தேவையான குழுக்கள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியோடு குறித்த பகுதியில் நிவாரணங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம்.

இலங்கையில் மிக முக்கியமான நகரமாக கல்முனை மாறியுள்ளது. நாளாந்தம் ஊடகங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போது கல்முனை நகரம் குறிப்பிடப்படுகிறது.

எனவே இந்நகரத்தை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இதற்காக தேவையான பி.சி.ஆர், ஆன்டிஜென் பரிசோதனைகளை அவசரமாக மேற்கொண்டு நகரத்தை வழமைக்குத் திரும்ப வேண்டிய பொறுப்பும் உள்ளது. அலுவலக உத்தியோகத்தர்கள் தியாகம், அர்ப்பணிப்போடு கடமை ஆற்ற வேண்டியது முக்கியமானதாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதேச  கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான்,
சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், , நிர்வாக கிராம உத்தியோகத்தர், யூ.எல்.பதுறுத்தீன்   உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.No comments: