கல்முனை நகர் முடக்கத்தால் போக்குவரத்துச் சேவை பாதிப்பு

செ.துஜியந்தன்


இன்று(29) கல்முனை நகரில் இருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் நடைபெறவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடிக்காணப்பட்டது. தூர இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் சிரமங்களுக்குள்ளாகி இருந்தனர். 

நேற்று(28) திங்கட்கிழமை கல்முனை பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பி.சி.ஆர் பரிசோதனையின் போது அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை  கண்டறியப்பட்டிருந்தது.  இதனையடுத்து நேற்று(28) மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதான கல்முனை செய்லான் வீதியில் இருந்து வாடிவீட்டு வீதி வரையிலான தமிழ், முஸ்லிம் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

இன்று(29) கல்முனை நகர் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அத்துடன் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள வீதிகளில் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் வீதித்தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போது கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் சடுதியாக அதிகரித்துச் செல்வதையிட்டு சுகாதாரப் பிரிவினராலும், மாநகர சபையினாலும், பொலிஸ், இராணுவப் பிரிவினராலும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தொற்று தொடர்பான பல்வேறு சுகாதார விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கல்முனை பிராந்தியத்தில் முகக்கவசம் இன்றி செல்வோர், அநாவசியமாக வீதிகளில் நடமாடித்திரிவோர், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதோர் ஆகியோருக்கு எதிரான கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றது. 

இங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மற்றும் சுகாதாரப்பரிவினரும் கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்க்கு  அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றனர். 

இந்நிலையில் பொதுமக்கள் அவர்களின் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சுகாதாரப்பரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


No comments: