நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொழும்புமாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வெள்ளவத்தைபகுதியில் 65 பேரும், பொறளை பகுதியில் 54 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 126 பேரும், கண்டி மாவட்டத்தில் 42 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையில், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 716 ஆக காணப்படுகின்றது.
இதன்படி, மினுவாங்கொடை கொத்தணியில் 3 ஆயிரத்து 59 பேரும், பேலியகொடை கொத்தணியில் 28 ஆயிரத்து 657 பேரும் இதுவரை தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொழும்புமாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 365 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 388 ஆக காணப்படுகின்றது.
இதன்படி, 8 ஆயிரத்து874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில், 467 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிக்கபட்டுவருகின்றனர்.
இதேவேளை, முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7 ஆயிரத்து 961 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 14 ஆயிரத்து 272 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: