கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
மதுபானம் மற்றும் எதனோல் உற்பத்திக்கு, சோளம் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இதற்கான வர்த்தமானியை வெளியிடுமாறு, கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, மஞ்சள் மற்றும் சோளம் உள்ளிட்ட அறுவடைகளை, விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரக் கூடிய போகத்தில் மஞ்சள் மற்றும் சோளப் பயிர்ச் செய்கையாளர்ளுக்கு, நியாயமான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற மஞ்சள் தொகைகளை அழிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, கடுமையான சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: