நத்தார் பண்டிகை - கத்தோலிக்க தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு


நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலையங்களின் உதவி அத்தியட்சகர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகளுக்கு, இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கத்தோலிக்க தேவாலயங்களின் ஆயர்களோடு கலந்துரையாடி, இன்றும், நாளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகள், பொலிஸ் தலைமையகத்தினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இன்றைய தினமும் பலர் தேவாலயங்களுக்கு சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும், இதனாலேயே பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

No comments: