வாகன விபத்துக்கள் தொடர்பில் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் நேற்றைய தினத்தில் மாத்திரம் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில், பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவந்த 3 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நாளொன்றுக்கு சுமார் பத்து உயிரிழப்புகள் விபத்துகளினால் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பன குறைவடைந்தன.
எனினும், தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேபோன்று, வாகன விபத்துக்களினால் நாளாந்தம் பலர் உடல் அவயங்களை இழந்து, அங்கவீனர்களாகும் நிலை ஏற்படுவதாகவும் பொலிஸார் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் மற்றும் கவனயீனம் என்பனவே விபத்துக்களுக்கு பிரதானமான காரணங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
எனவே, இந்த விடயங்களை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வாகன சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்யவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, இந்த காலங்களில் பாதசாரிகளையும், போக்குவரத்து நடவடிக்கைகளில் மிகவும் அவதானமாக ஈடுப்படுமாறும் பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன இதன்போது அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
No comments: