கைதாகிய பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் -எவ்வாறு கைது செய்யப்பட்டனர் ?


(க.சரவணன்)

வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை  விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சப்ரிகம' அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தலா 20 இலச்சம் ரூபா வீதம்  ஒதுக்கப்பட்ட 3 வீதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றினை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெற்றுள்ளார்.

இந்த வீதி நிர்மாணத்தை அமுலாக்கும் பொறுப்பு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி ஒப்பந்தகாரர் பெற்றுள்ள ஒவ்வொரு வீதிக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் 03 லட்சம் ரூபாவை லஞ்சமாக வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அதேவேளை பணம் கிடைக்கும் வரை, அந்த வீதி நிர்மாண வேலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு வழங்காமல்  இழுத்தடித்து வந்துள்ளதாகவும்  இந்தப் பின்னணியிலேயே தன்னிடம்  லஞ்சம் கோரும் விடயத்தை, குறித்த ஒப்பந்தக்காரர்  கொழும்பிலுள்ள லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து  லஞ்சம் வாங்கும் போது  கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவைச் சேர்ந்த 06 பேர் கொண்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தங்கிநின்று குறித்த ஒப்பந்தகாரரிடம் ஆலோசனைகளை வழங்கிய நிலையில் 

அதனையடுத்து ஒப்பந்தகாரர் கைதாகியவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் வழங்குவது தொடர்பாக பேசிய நிலையில் .

இதற் கிணங்க, பிரதேச செயலகத்துக்கு ஒப்பந்தக்காரருடன் சாதாரண நபர்போல் ஆடையணிந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும் சென்று, மூன்று லட்சம் ரூபா பணத்தை ஒபபந்தக்காரரிடம் இருந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பெற்றபோது, அவரை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கையும் மெய்யுமாகப் பிடித்து கைது செய்ததுடன் பிரதேச செயலாளரரையும் கைது செய்துள்ளதாக பொலிசாரரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதில் கைது செய்யப்பட்ட  இருவரையும்  அக்கரைப்பற்று பிராந்திய உதவி   பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு  அவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் நேற்று இரவு 7 மணியளவில்  அக்கரைப்பற்று நீதவான் நீதமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா  முன்னிழலயில் ஆஜர் செய்யப்பட்டபோது, இவர்களை  ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: