அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மரக்கறிகளின் விலையில் தளம்பல் !


(வி.சுகிர்தகுமார்)   

ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது.

இதேநேரம் சதோச உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு வருகை தந்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததையும் அவதானிக்க முடிந்தது.

பாதுகாப்பு தரப்பினர் பலத்த பாதுகாப்பையும் அதேநேரம் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கி தங்களது கடமையினை சிறப்பாக முன்னெடுத்த போதிலும் சிலர் அதனை பொருட்படுத்தாது நடந்த கொண்டனர்.

பாதுகாப்பு படையினர் இல்லாத சில வியாபார நிலையங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது அலைமோதினர்.

அன்மையில் அக்கரைப்பற்றில் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையும் மறந்து பொது மக்கள் செயற்பட்டதுடன் ஆலையடிவேம்பு சாகாமம் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக வீதியில் மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது.

மீன்வியாபாரத்திற்காக பிறிதொரு பகுதி ஒதுக்கப்பட்டபோதும் அங்கு மீன்வியாபாரிகள் யாரையும் காண முடியவில்லை. மாறாக அவர்களும் வீதி ஒரங்களில் விற்பனையில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க சந்தையில் மரக்கறிகளின் விலையில் தளம்பல் நிலை காணப்பட்டது. சில இடங்களில் அதிகமான விலைக்கும் சில இடங்களில் நியாயமான விலைக்கும் மரக்கறி உள்ளிட்ட சில பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதனை கட்டுப்படுத்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அங்கு கடமையாற்றும் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தரும் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வியாபாரிகளை திட்டி தீர்த்ததையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு டொபாக்கோ சிகரட் விற்பனை நிலையத்திலும் அதிகளவான மக்கள் சிகரட் கொள்வனவிற்காக காத்திருந்து பெற்றுச் சென்றனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் குறித்த ச்நதைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு நியாயமான விலைக்கு பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது காலத்தின் தேவை என்பது இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.
No comments: